பதிவு செய்த நாள்
29
மார்
2012
11:03
கோபிசெட்டிபாளையம் : புஞ்சை துறையம்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள, நவக்கிணறு மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். புஞ்சைதுறையம் பாளையத்தில் இருந்து, அடர்ந்த வனப்பகுதியில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் நவக்கிணறு மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த போதிலும், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வனத்துறையினரின் அனுமதி பெற்று, கோவிலில் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழாவில், புஞ்சைதுறையம்பாளையம், டி.என்.பாளையம், பங்களாபுதூர், காசிபாளையம், கோபி, பெருந்துறை, ஈரோடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் குண்டம் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். கிடா வெட்ட அனுமதியில்லை. கோவில் அருகே சிறிய கிணறு உள்ளது. கிணற்றில் தண்ணீர் வற்றாமல் உள்ளது. கோவில் அருகே குளம் ஒன்று உள்ளது. மாலை நேரத்தில் குளத்தில் வன விலங்குகள் தண்ணீர் குடித்துச் செல்கின்றன. புஞ்சைதுறையம்பாளையம் வனத்தின் எல்லையில் இருந்து கோவில் வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு வனத்துக்கு வாகனம் செல்லும் அளவுக்கு சாலை அமைந்துள்ளது. மிகவும் குண்டும் குழியுமான இந்த சாலையில் வாகனங்கள் தள்ளாடி செல்கின்றன. நடப்பாண்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்ததால், குண்டம் திருவிழா நடக்கவில்லை. கும்பாபிஷேக யாஹ பூஜை மார்ச் 27ம் தேதி துவங்கியது. அன்று தீர்த்தக்குடம் எடுத்து செல்லும் நிகழ்ச்சியும், நேற்று கும்பாபிஷேக விழாவும் நடந்தது. புஞ்சைதுறையம்பாளையத்தில் இருந்து இரு மினி லாரிகள் மூலம் இலவசமாக மக்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாட்டு வண்டி, டூ விலர், மினிடோர் வாகனங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று ஒரு நாள் மட்டும் கோவில் களைகட்டி இருந்தது.