சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுந்திர தினத்தையொட்டி கிழக்கு கோபுரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. பக்தர்களுக்கு பொதுதீட்சிதர்கள் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 73வது சுதந்திர தினத்தையொட்டி சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை பூஜைகள் நடந்தது. பொதுதீட்சிதர்கள் நடராஜர் சன்னதி சித்சபையில் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளித் தட்டில் தேசியக்கொடி வைத்து மேள தாளங்கள் முழங்க கிழக்கு கோபுரத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் கோபுரத்திற்கு தீபாராதனை வழிபாடு நடைப்பெற்று, கிழக்கு கோபுரம் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றி பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர். இதனைதொடர்ந்து சுதந்திர தினத்தையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பொதுதீட்சிதர்கள் சார்பில் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தென்னை, கொய்யா, மலர் செடிகள் என 1000 மரக்கன்றுகள் வழங்கினர். கோவில் மேற்கு கோபுரத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த போது வைக்கப்பட்ட நினைவு கல்வெட்டுக்கு மேல சன்னதி வியாபாரிகள் மலர் துாவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.