திருப்புவனம்: மடப்புரத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அணிவிக்கப்படும் புடவைகளை வாங்க பெண் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு பெண் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம்.
குழந்தை பேறு, திருமண தடை, குடும்பத்தில் நிம்மதி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் வேண்டி வரும் பக்தர்கள் மடப்புரம் காளிக்கு பட்டு சேலை சார்த்துவது வழக்கம். தினசரி அம்மனுக்கு சார்த்தப்படும் பட்டுப்புடவைகள் சேகரிக்கப்பட்டு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் 100 முதல் 500 புடவைகள் வரை ஏலம் விடப்படும். 100 ரூபாயில் ஆரம்பிக்கும் ஏலம் 5ஆயிரம் ரூபாய் வரை கூட போகும். பக்தர்கள் பலரும் விரும்பி ஏலத்தில் பட்டுப்புடவைகளை எடுப்பது வழக்கம். சுப காரியங்கள், கோயில் விசேஷங்களுக்கு அம்மன் புடவை என பெண்கள் அணிந்து செல்வார்கள்.