பழநி:பழநி முருகன் கோயில் பிரசாதம் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு சான்றிதழ் கிடைத் துள்ளது. அதனை முதல்வர் பழனிசாமி மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்க அறநிலையத் துறை காத்திருக்கிறது.
திருப்பதி லட்டு போல, பழநி என்றால் பஞ்சாமிர்தம் புகழ்பெற்றது. கோயில் நிர்வாகம் மூலம் பஞ்சாமிர்தம் அரைக் கிலோ டப்பா ரூ. 35, டின் ரூ.40க்கும், 210 கிராம் 12 சிறிய டப்பாக்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் ரூ.300க்கு விற்கப்படுகிறது. கோயில் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆண்டுகளுக்கு ரூ.100 கோடிக்கு மேல் விற்கிறது. பஞ்சாமிர்தத்தில் உள்ள பேரீச்சம் பழம், தேன், வாழைப்பழம் ஆகியவை மருத்துவகுணம் மிக்கவை. கடந்த 2016ல் கோயில் நிர்வாகம் சார்பில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டது.புவிசார் குறியீடு கிடைத் துள்ளது.
அதற்கான சான்றை மலைக்கோயில், திருஆவினன்குடி கோயிலில் வைத்து பூஜை செய்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை, புவிசார் குறியீடு கிடைத்துள்ளதை முதல்வர் பழனிசாமி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. முதல்வரின் தேதிக்காக காத்திருப்பதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.