பதிவு செய்த நாள்
30
ஆக
2019
12:08
ராசிபுரம்: கோவில் நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி, அப்புறப்படுத்தியது குறித்து புகார் அளித்தும், இந்து அறநிலையத்துறை மெத்தனமாக உள்ளது.
ராசிபுரம் அடுத்த, புதுச்சத்திரம் ஒன்றியம் எஸ்.நாட்டாமங்கலம் பகுதியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காளம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வேம்பு, ஊஞ்சை உள்ளிட்ட மரங்கள் இருந்தன. கடந்த வாரம் இதே பகுதியை சேர்ந்த சிலர், பொக்லைன் மூலம் இப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, பாதை அமைத்துள்ளனர். இது குறித்து, புதுச்சத்திரம் போலீசாரிடம் இப்பகுதி விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவில் செயல் அலுவலரிடமும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், கோவில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் கூறுகையில்,” இந்த புகார் குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.