சங்கடம் என்றால் ’கஷ்டம்’. ’ஹர’ என்றால் கரிந்து (எரிந்து) போதல். ’சதுர்’ என்றால் ’நான்கு’. அதாவது சங்கடத்தை போக்கும் நான்காம் நாள் என்பதால் இப்பெயர் வந்தது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி செவ்வாயன்று வருமானால் அதை விட சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்க சிறந்த நாள் வேறில்லை.
அந்த நாள் அமையாவிட்டால், ஆவணி தேய்பிறை சதுர்த்தியன்று விரதம் தொடங்கலாம். இந்த ஆண்டு செப்.17 (ஆவணி 31) செவ்வாய்க்கிழமை சேர்ந்து வருகிறது. இந்நாளில் விரதமிருந்து இரவில் கோயிலில் நடக்கும் சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். மறுநாள் நீராடியதும் விநாயகரை வழிபட்டு விரதம் முடிக்க வேண்டும். இதை எந்த தமிழ் மாதத்தில் துவங்குகிறோமோ, அதே மாதத்தில் முடிக்க வேண்டும். வளர்பிறை சதுர்த்தி விரதத்தை மட்டுமே ஒருவர் ஆயுள் முழுவதும் அனுஷ்டிக்கலாம். நவக்கிரகங்களில் கேதுவின் அதிபதி விநாயகர். கேது திசை, கேது புத்தியால் சிரமப்படுபவர்கள் செவ்வாயன்று இவரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமையில் வன்னி இலைகளால் அர்ச்சித்தால் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி பாதிப்பு குறையும். ஞாயிறன்று எருக்கம்பூ மாலை அணிவிக்க சூரிய தோஷம் விலகும்.