சிவனுக்குரிய பிரதோஷத்துக்கு சனிக்கிழமை முக்கியம். அது போல விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி செவ்வாய்க்கிழமை வந்தால் சிறப்பு. அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு, விநாயகர் ஒருமுறை சாப விமோசனம் கொடுத்தார். அப்போது ”விநாயகப் பெருமானே! எனக்குரிய செவ்வாய்க்கிழமையும், தங்களுக்குரிய சதுர்த்தி திதியும் சேரும் நாளில் யார் தங்களை வழிபட்டாலும் செவ்வாய் தோஷம் பாதிக்காது” என வாக்களித்தார். எனவே விநாயகர் வழிபாட்டில் செவ்வாய் முக்கியத்துவம் பெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சிவன் கோயிலில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்தார். இங்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் இளைஞன் ஒருவன் இறந்ததை அறிந்து, பதிகம் பாடி பிழைக்கச் செய்தார். இக்கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரில் விஷபயம் போக்கும் ’விடம் தீர்த்த விநாயகர்’ கோயில் உள்ளது.