பதிவு செய்த நாள்
06
செப்
2019
11:09
விழுப்புரம்: பரிக்கல் லட்சுமிநரசிம்மர் கோவிலில், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறவிருப்பதால், வரும் 9ம் தேதி பாலாலயம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளது.
இங்கு, லட்சுமிநரசிம்மர் தாயாரை மடியில் தாங்கியபடி, சாந்தசொரூபமாக காட்சியளிக்கின்றார்.இதேபோன்று, மற்ற கோவில்களில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு எதிரில் காட்சியளிப்பார். ஆனால், இக்கோவிலில் மூலவர் லட்சுமிநரசிம்மர் அருகில், பக்த ஆஞ்சநேயர் காட்சியளிக்கின்றார். இக்கோவிலுக்கு, தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில், சிதலமடைந்து காணப்படும் கோவிலை திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தனர்.
இதற்காக, கோவிலில் வரும் 9ம் தேதி துவங்கி, 3 நாட்களுக்கு பாலாலயம் நடைபெற உள்ளது.அதை தொடர்ந்து, கோவிலில் திருப்பணிகள் நடக்கிறது. திருப்பணி மேற்கொள்ளப்படுவதால், அடுத்த 7 மாதங்களுக்கு மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது. உற்சவர் தரிசனம் மட்டுமே செய்ய முடியும். கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு தான், மூலவரை தரிசனம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் சுரஷே், செயல் அலுவலர் ஜெயக்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.