திருமங்கலம்: திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட சத்ய யுக சிருஷ்டி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி செப்.,5 காலை 8:30 மணிக்கு ஓம்கார ஜபம், தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணா ஹூதி நடந்தது.
6 ல் முதல் கால யாகசாலை பூஜை, 7ல் காலை 2ம் கால யாகசாலை பூஜை, மாலை 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை முடிந்து பரிவார மூர்த்திகள் விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின் முக்தீஸ்வரர் விமானத்தில் கும்பாபிஷேகம் நடந்ததையடுத்து ஷீரடி சாய்பாபா, எமதர்மராஜா, கவுதம புத்தர் கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
‘நவராஜ மண்டலம்’ பெயரில் தாமரை இதழ்கள் போன்ற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் கீழ் காலாதீஸ்வரர் சன்னதி, அதைச்சுற்றி நவகிரகங்கள், அடுத்த சுற்றில் 12 ராசிகளின் அதிபதிகள், பின் 27 நட்சத்திரங்கள் தனித்தனி சன்னதிகளில் நிறுவப்படுகிறது. முக்தி நிலைய தலைவர் வசந்தசாய், நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை வகித்தனர். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர ஆலோசகர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர். சிற்ப வேலைகளை ஸ்தபதி பழனிசாமி குழுவினர் செய்தனர். தெக்கூர் கைலாசநாதர் கோயில் ஆபத்தோத்தாரண குருக்கள் பூஜைகளை நடத்தினார்.