சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சுதைகளுக்கிடையே செடிகள் வளர்வதால் கோபுரங்களில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பிரசித்தி பெற்ற சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை போல 6 கால பூஜைகள் நடைபெறும் சிறப்பு வாய்ந்தது.
இங்கு கும்பாபிஷேகம் 2007 ம் ஆண்டு நடந்தது. பனிரெண்டாண்டுகள் நிறைவடைந்து விட்டதால், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால் அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் கூட அறநிலையத்துறை துவக்கவில்லை. கோயிலில் உள்ள துாண்கள், பழமையான கல்வெட்டுகள், சுதைகள் சேதமடைவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘பழமையான கோயில் என்பதால் தொல்லியல்துறையின் அனுமதி பெற்று கும்பாபிஷேக பணிகள் துவக்க வேண்டும் என்று கூறுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கோயில் சீரமைப்புக்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அறங்காவலர் குழு நியமிப்பதில் ஏற்பட்ட இழுபறியால் பணிகள் துவக்கவில்லை. கும்பாபிஷேக பணிகள் துவங்காததால் கோபுரங்களில் உள்ள சுதைகள் பொலிவிழந்து வருகின்றன. இவற்றுக்கிடையே செடிகள் வளர்வதால் கோபுரத்தில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பழமையான கோயிலை காக்க நடவடிக்கை தேவை,’ என்றனர்.