சிவபெருமானை வேண்டிய ராவணனுக்கு சிவலிங்கம் கிடைத்தது. அதை இலங்கைக்கு எடுத்துச் செல்வதை விநாயகர் தடுக்க வந்தார். ஏனெனில் பாரத புண்ணிய பூமியிலேயே சிவலிங்கம் நிறுவப்படவேண்டும் என்பது அவரது எண்ணம். கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம் என்னும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இத்தல இறைவன் மகாபலம் பொருந்தியவர் என்பதால் ’மகாபலநாதர்’ என அழைக்கப்படுகிறார். பக்தர்களே இவருக்கு அபிஷேகம், பூக்களால் அர்ச்சனை செய்யலாம். குருக்கள் மந்திரம் மட்டும் சொல்லுவார். சுவாமியின் திருமேனி பூவின் இதழ் போல நீண்டும், லிங்க பாணம் இல்லாமல் துளையாக இருக்கும். அதற்குள் ராவணன் கொண்டு வந்த லிங்கம் உள்ளது. ஆறடி உயரம் கொண்ட இதனை 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகத்தின் போது மட்டுமே தரிசிக்கலாம். சிறுவனாக வந்த விநாயகருக்கும் இங்கு தனிக்கோயில் உள்ளது.