மகான்கள், முனிவர்கள் காலையில் சூதாட்டக்கதை, மதியம் பெண்களின் கதை, இரவில் திருடனின் கதையைப் படிக்கவோ, கேட்கவோ செய்வார்களாம். இதில் சூதாட்டக்கதை என்பது மகாபாரதம். இதை காலை நேரத்தில் படிக்க வேண்டும். வேலைக்கு கிளம்பும் போதே, சூதாட்டம், பெண் கொடுமை போன்ற தீயசெயல்களில் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம் வர வேண்டும் அல்லவா! அதனால் தான் இந்த ஏற்பாடு.
ராமாயணத்தை மதியம் படிக்க வேண்டும். சீதையைப் போல பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நூல் ராமாயணம். பெண்கள் வீட்டு பணிகளை முடித்து விட்டு, மதியம் ஓய்வெடுப்பர். இந்த நேரத்தில் தூக்கம், தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதை தவிர்த்து விட்டு ராமாயணம் போன்ற நல்ல கதைகளை படிக்க வேண்டும். உள்ளம் கவர் கள்வனான கிருஷ்ணரின் கதையான ஸ்ரீமத் பாகவதத்தை இரவில் படிக்க வேண்டும். அப்படியே கிருஷ்ணரின் திருவடியை மனதில் சிந்தித்தபடி தூங்கச் செல்ல வேண்டும்.