வீடு தேடி வரும் அத்திவரதர்: நவராத்திரி கொலுக்கு புதுவரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2019 01:09
திருப்பூர்: நவராத்திரி கொலு பண்டிகைக்கு புதுவரவாக அத்தி வரதர் பொம்மைகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துள்ளன.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்திலிருந்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளிய அத்திவரதர் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதனால், உலகம் முழுவதும் அத்திவரத பெருமாள் மிகவும் பிரசித்தி பெற்றது.இச்சூழலில், நவராத்திரி பண்டிகை முன்னிட்டு, கொலு பொம்மை தயாரிப்பிலும் புதுவரவாக அத்திவரதர் சிலை பிரபலமடைந்து வருகிறது.
அத்திவரதர் பொம்மைகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி கேட்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, தமிழ்நாடு சர்வோதயா சங்க விற்பனை மேலாளர் பூபதி கூறியதாவது: நவராத்திரி விழா வரும் 29ல் துவங்குகிறது. கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைக்கப்படும். வழக்கமாக பெருமாள், அம்பாள் பொம்மைகள் அதிகளவு விற்பனையாகும். இந்தாண்டு அத்திவரதர் மிகவும் பிரபலமடைந்ததால், சயன கோலம், நின்ற கோலத்தில் பொம்மைகள் தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். கொலு பொம்மை வாங்க வருவோர் அவசியம் அத்திவரதரையும் வாங்கிச்செல்கின்றனர். ஒரு அடியில் நின்ற கோலத்தில் அமைந்த பொம்மை, 490 ரூபாய்க்கு கிடைக்கும். இதற்கு அதிக, டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அடுத்த, 40 ஆண்டுகளுக்கு இந்த அத்திவரதர் அனைவரது இல்லங்களிலும் காட்சி தரப்போகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.