பதிவு செய்த நாள்
24
செப்
2019
02:09
பொங்கலுார்:மழை வேண்டி விவசாயிகள் பாதயாத்திரை சென்ற நிலையில், நேற்று 23ல் பரவலாக மழை பெய்தது. வருண பகவான் கருணை காட்டியதாக எண்ணி விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வறட்சி நீங்கி நல்ல மழை பெய்ய வேண்டி பொங்கலுார் பி.ஏ.பி., பாசன சபை தலைவர் கோபால் தலைமையில், விவசாயிகள் பொங்கலுார் வலுப்பூரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அதன்பின், புறப்பட்டு கண்டியன் கோவில், கண்டீஸ்வரர் கோவில், பூசாரி பாளையம் மாகாளியம்மன் கோவில், பழனி ஆண்டவர் கோவில், நடுமலையான் கோவில், சின்னாரிய பட்டி மாரியம்மன் கோவில், காங்கயம் - சிக்கரசம்பாளையம் மாகாளியம்மன் கோவில் உட்பட பல கோவில்களிலும் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
நிறைவாக சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணியா சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை சென்று சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டனர்.
இதில் காங்கயம் மற்றும் பொங்கலுார் பகுதி களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.விவசாயிகள் மழை வேண்டி வழிபட்ட நிலையில் வருணபகவான் கருணையால், நேற்று 23ல் மாலை பொங்கலூர் வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.