பதிவு செய்த நாள்
30
செப்
2019
10:09
சென்னை:நவராத்திரி கொலுவை பார்க்க கொடுத்து வைக்க வேண்டும். அந்த வகையில், நான் கொடுத்து வைத்தவள், என, வடபழநி ஆண்டவர் கோவிலில், சக்தி கொலுவை துவக்கி வைத்த, திரைப்பட பின்னணி பாடகி சுசீலா தெரிவித்தார்.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று முதல், அக்., 8ம் தேதி வரை, சக்தி கொலு எனும் பெயரில், கொலு வைக்கப்பட்டுள்ளது. துவக்கம்கொலு துவக்க விழா, நேற்று மாலை நடந்தது. விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட பின்னணி பாடகி சுசீலா, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்டிரீஸ் பொதுச்செயலர் கே.சரஸ்வதி, கோவில் துணை கமிஷனர் சித்ராதேவி, சகுந்தலா சங்கர் ஆகியோர், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.தமிழக பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், கொலு அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, திரைப்பட பின்னணி பாடகி சுசீலா பேசுகையில், நவராத்திரி கொலு, மிகவும் நேர்த்தியாகவும், கலைநயத்துடனும் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க, கொடுத்து வைக்க வேண்டும். அந்த வகையில், நான் கொடுத்து வைத்தவள், என்றார். இதையடுத்து, யாக சாலையுடன் கொலு விழா, கோலாகலமாக துவங்கியது.பக்தர்கள் பங்களிப்புடன் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 1,500க்கும் மேற்பட்ட பொம்மைகள் பக்தர்களால் வழங்கப்பட்டன. அதனுடன், கோவில் கொலு பொம்மைகள் சேர்த்து, ஒன்பது படிகளுடன் பிரமாண்ட கொலு, நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டுள்ளன.
பிரமாண்டம்: சக்தி கொலு குறித்து, கோவில் துணை கமிஷனர் சித்ராதேவி கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு பின், தக்கார் எல்.ஆதிமூலம் முயற்சியால், நவராத்திரி கொலு, சக்தி கொலு எனும் பெயரில், பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் பங்களிப்பு, 80 சதவீதம் உள்ளது. தினமும், 10 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.கொலு கண்காட்சியை ஒட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.