உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2019 12:09
உளுந்தூர்பேட்டை: டிவி சீரியல்கள் நல்லவற்றை விட, தீயவற்றை தான் அதிகளவில் பரப்பப்படுகிறது என உளுந்தூர்பேட்டையில் நடந்த நவராத்திரி விழாவில் ஸ்ரீ சாரதா ஆசிரம தலைமை மாதாஜி ஸ்ரீ ராமகிருஷ்ணா ப்ரியா அம்பா பேசினார்.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. இவ்விழா வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் துவக்கமாக நேற்று நடந்த விழாவிற்கு ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தனியார் டிவி சேர்மன் தேவநாதன்யாதவ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா பேசுகையில், டிவி சீரியல்கள் நாட்டையும். குடும்பத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்கள் நல்லவற்றை விட, தீயவற்றை தான் அதிகளவில் பரப்பப்படுகிறது. குடும்பத்தை சீரழிக்கும் இதுபோன்ற சீரியல்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என உறுதியேற்போம்.
மிருகங்கள் கிடைக்கக் கூடிய அனைத்தையும் அடித்து சாப்பிடும், ஆனால் மனிதர்கள் அப்படி அல்ல. இதை தான் சாப்பிடவேண்டும் என தீர்மானித்து வைத்து சாப்பிடுகிறோம். சுயநலத்தால் நாடு தாங்காது. எனக்கு தான், என்னால் தான் என்ற மன நிலை இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும். நமக்கு பதிலாக மற்றவருக்கு செய்யும் உதவியாக இருந்தால், மற்றவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷம் நமக்கு பெரும் மன மகிழ்ச்சியை ஏற்படும். நம் மனதை தூய்மை ஏற்படுத்தும். பண்பாடு நிறைந்த சமுதாயமாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.