டென்மார்க் நாட்டை ஆண்ட ராஜாவை எதிர்த்து அங்குள்ள தளபதி கிளர்ச்சியில் ஈடுபட்டார். கோட்டையில் புரட்சிக் கொடியை ஏற்றினார். ராஜாவுக்கு கோபம் வந்தது. “உடனடியாக கொடியை அவிழ்த்து விட்டு கீழே வராவிட்டால் நான் அனுப்பும் போர்வீரன் அதை அவிழ்ப்பான்” என எச்சரித்தார்.
“என்னை நோக்கி வரும் வீரனைச் சுட்டு வீழ்த்துவேன்.முடிந்ததைப் பாருங்கள்” என்றார் தளபதி.
ராஜா தயங்கவில்லை. “தளபதியே! அனுப்பப் போகும் வீரன் வேறு யாரும் அல்ல. நானே அங்கு வரப் போகிறேன். என்னை வேண்டுமானால் நீங்கள் சுட்டுப் பார்க்கலாம்! தீவிரவாதத்திற்கு அடிபணிவதை விட பிறந்த தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என ஆவேசமுடன் கத்தினார் ராஜா. தவறை உணர்ந்த தளபதி மீண்டும் தாய்நாட்டுக் கொடியை ஏற்றினார். இந்த ராஜாவைப் போலவே இயேசுவும் நம் வாழ்வில் தலையிட்டு உயிரைத் தியாகம் செய்தார். அந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
பொன் மொழிகள்
* எந்த நிலையில் இருந்தாலும் திருப்தியோடு இருக்க கற்றுக் கொள்ளுங்கள். * வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளோ என்றும் அழியாது. * கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த மனதைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், நிம்மதியும், அமைதியும் உள்ள ஜீவனைக் கொடுத்திருக்கிறார். * தர்மம் தான் ஒரு தேசத்தை உயர்த்துகிறது. ஆனால் பாவமோ எந்த ஜனங்களுக்கும் இழிவைத் தரும். * அறிவு கர்வத்தால் வீங்கும். அன்போ நன்மையை பெருக்கும். * பொல்லாத நாக்கு உள்ளவன் பூமியில் நிலைப்பதில்லை. * எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் தேர்ந்தெடுங்கள். * நல்லவரை ஆண்டவர் பசியால் வருந்த விட மாட்டார். தீயவர்கள் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்கமாட்டார். * தேனை மிகுதியாக உண்பது நல்லது அல்ல; தற்புகழை நாடுவதும் நல்லது அல்ல. * நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள். துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.