புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், அன்னபட்சி வாகனத்தில் நாச்சியார் வீதியுலா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி ஐந்து நாள் உற்சவம் நடக்கிறது. தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மூன்றாம் நாள் உற்சவம் நேற்று நடந்தது. காலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், 5.30 மணிக்கு திருப்பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி, திருவாய்மொழி சேவை நடந்தது. காலை 7.00 மணிக்கு திருபாராதனம், திருப்பாவை சாற்றுமுறை, 8.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 10.00 மணிக்கு அன்னபட்சி வாகனத்தில், நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்தனர்.