பதிவு செய்த நாள்
22
அக்
2019
03:10
உலகப் புகழ்மிக்க தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்த காஞ்சிகயிலாசநாதர் கோயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியொரு வியப்பின் உச்சம், இந்த கோயில்! கோயிலின் நான்குபுறமும் பிரமாண்ட மதில் சூழ்ந்திருக்க, திருக்கயிலாய மலையாகவே திகழ்கிறது கோயில். இதை ராஜசிம்ம பல்லவ மன்னன் எடுப்பித்தான். எனவே, இந்தத் தலம் ராஜசிம்ம பல்லவ ஈஸ்வரம் என்றே குறிப்பிடப்படுகிறது. கோயிலின் உள்ளே உள்ள பல சிற்றாலயங்களில் திகழும் தெய்வ வடிவங்கள் கொள்ளை அழகு, அவற்றில் துர்கையின் சிற்பம் பிரமிக்கவைக்கிறது.
ஒற்றைக் காலைத் தூக்கியபடி, கடும் கோபமான முகத்துடன், சிங்கத்தின் முதுகின் மேல் தன் இடது காலை ஊன்றியபடி, தரையில் நின்றிருக்கும் துர்கையின் திருக்கோலத்தை வேறெங்கும் பார்ப்பது அரிதான ஒன்று. எட்டுத் திருக்கரங்களுடன் செம்மாந்து நிற்கும் தேவி, இடது கரங்களில் முறையே வில், கேடயம், சங்கு, கிளி ஆகியவற்றையும், வலது கரங்களில் அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பின் மீது வைத்தபடி நிற்கிறாள். இத்தனை இருந்தாலும், அவளின் முகத்தைக் கூர்ந்துகவனித்தால், அதில் ததும்பி நிற்கிற கருணையை உங்களால் உணரமுடியும்!