பதிவு செய்த நாள்
31
அக்
2019
01:10
சபரிமலை: சபரிமலையில் தரிசனம் மற்றும் பிரசாதத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. அறைகள், பூஜை முன்பதிவுக்கும் விரைவில் ஆன்லைன் வசதி அறிமுகமாகிறது. சபரிமலையில் கூட்டத்தை முறைப்படுத்த கேரள போலீஸ் ‘விரிச்சு வல்கியூ’ என்ற ஆன்லைன் முன்பதிவை அறிமுகம் செய்தது. இதற்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆண்டுக்கு ஆண்டு இதில் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமானது. இந்த முன்பதிவு செய்தவர்கள் பம்பையில் போலீஸ் கவுண்டரில் முன்பதிவு சீட்டை காட்டி, கூப்பன் பெற்று மரக்கூட்டம் சென்றபின் அங்கிருந்து சந்திராங்கதன் ரோடு வழியாக பெரிய நடைப்பந்தலில் இதற்கான சிறப்பு கியூ மூலம் விரைந்து தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டு கேரள போலீசுடன், தேவசம் போர்டும் இணைந்துள்ளது. இதன்படி தரிசனத்துடன் பிராசதத்தையும் முன்கூட்டியே பதிவு செய்ய முடியும். இதற்காக (WWW.sabarimalaonline.org) என்ற இணையதளத்தில் பெயர், முகவரி, ஆதார் எண், போட்டோ, இமெயில் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றை பதிவேற்றம் செய்து பயனாளர் பெயர் (யூசர்நேம்), கடவுச்சொல் உருவாக்க வேண்டும்.
அதன் பின் தரிசன தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து, நான்கு பேருக்கு முன்பதிவு செய்யலாம். அதில் குரூப் லிங்கில் சென்றால் 10 பேருக்கு முன்பதிவு செய்யலாம். தரிசன முன்பதிவிற்கு கட்டணம் கிடையாது. அதன் பின் பிரசாதங்களான அரவணை, அப்பம், அபிஷேக நெய், விபூதி, மஞ்சள் குங்குமம் போன்றவற்றை தேவையை குறிப்பிட்டு முன்பதிவு செய்து அதற்கான கட்டணம் மற்றும் தேவசம்போர்டின் இன்டர்நெட் கட்டணம் 10 ரூபாய் சேர்த்து ஆன்லைனின் செலுத்த வேண்டும். இறுதியில் தரிசனம் மற்றும் பிரசாதத்துக்கான அத்தாட்சி கூப்பன் கிடைக்கும். அடையாள அட்டை, இந்த கூப்பன்களுடன் சபரிமலைக்கு சென்று விரைவாக தரிசனம் செய்யலாம். தற்போது நவ., 17 முதல் டிச., 24 வரை முன் பதிவு செய்யலாம். அறைகள், பூஜை, வழிபாடு காணிக்கை முன்பதிவு வசதி விரைவில் அறிமுகம் öய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.