பதிவு செய்த நாள்
02
நவ
2019
12:11
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, சூரபத்மனை, இன்று வதம் செய்கிறார்.
சென்னை புறநகரான திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில், அறுபடை வீடுகளுக்கு நிகரானது என கூறப்படுகிறது.இக்கோவிலில், இந்தாண்டு சஷ்டி விழா, அக்டோபர், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில், ஆட்டுக்கிடா, புருஷாமிருகம், கிளி, பூதம், வெள்ளி அன்னம் உள்ளிட்ட வாகனங்களில், சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார்; அசுர பொம்மை ஊர்வலமும் நடந்தது. பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம், இன்று மாலை, 6:00 மணிக்கு, கோவில் கிழக்கு முகப்பில், விமரிசையாக நடைபெறுகிறது.விழாவை ஒட்டி, 11, 108, 1,008 முறை, கோவில் கொடிமரம் வட்ட மண்டபத்தை, பக்தர்கள் வலம் வந்து, கந்தசுவாமிக்கு அர்ச்சனை செய்ய உள்ளனர். மதியம், 2:00 மணிக்கு, சுவாமி, சரவண பொய்கையில் எழுந்தருளி, தீர்த்தவாரி ஆடுகிறார்.
தொடர்ந்து, கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களை, வீரபாகு வேடமணிந்த குழுவினர், சிறுவர்கள் வதம் செய்வர். கந்தசுவாமி, வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்மனை விரட்டிச்சென்று, வதம் செய்வார். பின், தங்கமயில் வாகனத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்திவேல், உதவி ஆணையர் ரேணுகா தேவி, மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் குழுவினர் செய்துள்ளனர். பிற கோவில்களில் இல்லாத சிறப்பு திருப்போரூரில் உற்சவர் கந்தசுவாமி, விண்ணிலிருந்து போர் புரிந்து, அசுரர்களின் ஆணவத்தை அழித்ததாக, பக்தர்கள் கூறுகின்றனர். அதேசமயம், மற்ற எந்த கோவில்களிலும் இல்லாத வகையில், ஆறு அசுர பொம்மைகள், முழு உடல் தோற்றத்துடன், இங்கு தான் வதம் செய்யப்படுகிறது.