பதிவு செய்த நாள்
03
நவ
2019
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வடவீதி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது. அசுரர்களை முருகன் வதம் செய்வதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா கொண்டாடப்படுகிறது. இவை, ஐப்பசி மாதம், ஆறு நாட்கள் கந்தசஷ்டி விழா நடக்கும். அதன்படி, கடந்த அக்., 28ல், தொடங்கி கந்த சஷ்டி விழா நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கம்பத்திளையனார் சன்னதியில் உள்ள, மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. நேற்று மாலை, 6:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பராசக்தி அம்மனிடம் வேல் வாங்கிக்கொண்டு, மாட வீதிகளில் வலம் வந்தார். பின்னர், திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள, வடவீதி சுப்பிரமணியர் சுவாமி கோவில் எதிரே வந்தடைந்தார். அங்கு, அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். பின்னர், முருகப்பெருமான் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.