பதிவு செய்த நாள்
05
நவ
2019
02:11
உடுமலை:பக்தர்களின் ’ஆரோகரா’ கோஷத்துடன் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் நடந்தது. உடுமலையிலுள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில், சுப்ரமணியர் சன்னதி, முத்தையாபிள்ளை லே அவுட் சுப்ரமணிய சுவாமி கோவில், பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில், போடிபட்டி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கந்த சஷ்டி விழா, கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது.
பக்தர்கள், காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். நாள்தோறும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தினமும், மயூர வாகனம், ரிஷபம், மயில், யானை, சின்னமயில் என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்றுமுன் தினம் (நவம்., 3ல்) நடந்தது. சூரனை வெற்றி கொண்ட சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நேற்று (நவம்., 4ல்) நடந்தது.
வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மணக்கோலத்தில் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள் சரடு, குங்குமம், பூ உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில், சுவாமி வெள்ளித்தேர் திருவீதி உலா நடந்தது.