பதிவு செய்த நாள்
12
நவ
2019
01:11
கரூர்: ’கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க, தனியாக ஒரு டி.ஆர்.ஓ.,வை நியமிக்க வேண்டும் என, தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்’ என, திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூர் அருகே, வெண்ணைமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க, கடந்த, 2011 முதல் ஆய்வு செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, டி.ஆர்.ஓ., 100 ஏக்கர் நிலங்களுக்கு கோவில்கள் பெயரில் பட்டா வழங்கியுள்ளார். அதில், உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மீதியுள்ள, 400 ஏக்கர் நிலத்தை மீட்க, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், 1,000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, அந்த வழக்குகளை திருச்சி மாவட்டத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருப்பவர்கள், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ள சம்மதித்தால், அதை அரசுக்கு பரிந்துரை செய்வோம். அதற்காக, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண் டாம். அறநிலையத்துறை நிர்ணயம் செய்யும் வாடகை குறைவாகவே இருக்கும். கரூர் மாவட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான, 4,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அவற்றை மீட்க, தனியாக ஒரு டி.ஆர்.ஓ.,வை நியமிக்க, அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். ஏற்கனவே, ஐந்து மாவட்டங்களுக்கு தனி டி.ஆர்.ஓ., நியமிக்க அனுப்பிய கருத்துரு கிடப்பில் உள்ளது. அதை நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கு பட்டா வழங்க முடியாது. தமிழக அரசின் அரசாணை மீது, மேல் நடவடிக்கை இருக்காது என, அரசின் தலைமை வக்கீல் சென்னை உயர்நீதி மன்றத்தில் உறுதி அளித்துள்ளார். எனவே, பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.