பதிவு செய்த நாள்
13
நவ
2019
02:11
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவை யொட்டி முகூர்த்த கால் நடும் பணி நடந்தது.பொள்ளாச்சி எஸ்.எஸ்.கோவில் வீதியில், கரிவரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் மூலவராக அருள்பாலிக்கிறார்.
ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், பெருமாளுக்கு நேர் எதிரே கருடாழ்வார், பிரகாரத்தில் சக்கரத்தாழ் வார், யோக நரசிம்மர் சன்னதிகளும் அமைந்துள்ளன.கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2001ம் ஆண்டு நடந்தது. அதன்பின், 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன் பாலாலயம் நடத்தப்பட்டு, கும்பாபி ஷேக திருப்பணிகள் நடக்கின்றன. கோவில் வளாகம் மற்றும் கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள்; பெருமாளின் அவதாரங்கள், ஆழ்வார்கள் ஓவியங்கள் கோவில் வளாக சுவர்களில், சித்திரங்களாக வரையப்படுகின்றன.
இந்நிலையில், கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை அமைக்கும் பணிக்காக நேற்று முன்தினம் (நவம்., 11ல்) முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. சங்கல்பம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.முகூர்த்த கால் கோவில் வளாகம் வழியாக வலமாக எடுத்து வரப்பட்டு நடும் நிகழ்ச்சி நடந்தது.இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், வடக்கு அட்மா தலைவர் சக்திவேல் மற்றும் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.