பதிவு செய்த நாள்
19
நவ
2019
12:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, செட்டிக்காளிபாளையத்தில், ஆலமரத்தடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் பத்ரகாளியம்மன். கோவில் கட்ட அம்மன் உத்தரவு தராமல், 300 ஆண்டுகளாக மரத்தடியில் குடிகொண்டுள்ளாள். கோவிலில், அரை ஏக்கரில் பரப்புக்கு பரந்து விரிந்துள்ளது ஆலமரம். கோவில் கர்ப்பகிரகம் தான், மரத்தடியில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு அடி உயர சுயம்புவாக பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். சுயம்புக்கு பின்பகுதில், ஐந்தரை அடி உயர அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறையாக காட்சி தரும் ஆலமரத்தின் விழுதுகளில், யானை, பாம்பு, புற்று மற்றும் காவடிகள் போன்ற வடிவங்கள் இயற்கையாக காட்சி அளிக்கின்றன. அம்மனுக்கு நித்தமும் காலை, 7:00 மணிக்கு பொங்கலிட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் கனிகள் வைத்து வழிபாடு செய்கின்றனர். பவுர்ணமி, அமாவாசை நாட்களில், கோவிலுக்கு வரும், பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமாக, அபிேஷகம், பொங்கல் வழங்கப்படுகிறது. மாலையில் நெய்விளக்கேற்றி, அவல், சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில், கருப்பராயன், கன்னிமார் சுவாமிகள், மாகாளியம்மன் காவல் தெய்வங்களாக உள்ளனர். குழந்தை பாக்கியம், திருமண தடங்கலுக்கு தீர்வு கேட்டு, அம்மனை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், பொங்கலிட்டு, கிடா வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.