விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருவண்ணாமலை எனும் சிற்றூர். மினி பஸ் வசதியும், ஆட்டோ வசதியும் அதிகமுண்டு. மலையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுமலையானை ஒத்த வடிவத்தில் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் அருள்பாலிக்க, கீழே கோனேரி தீர்த்தக் கரையில் மலைபோன்ற வடிவத்தில் அரசமரத்தடியில் கணபதியார் அருள்பாலிக்கிறார். பீடம் ஏதும் இல்லாமலே ஏழரை அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ஆகிருதியான வடிவத்தில் காட்சி கொடுக்கின்றார் இங்கு கணபதி. 50 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பக்தர் தன் கனவில் யானை துரத்துவது போலக் கனவுகண்டார். ஒரே கனவு மீண்டும் தொடர்ந்தது பல இரவுகளுக்கு. கலங்கிய பக்தருக்கு கனவில் தன் இருப்பிடம் அறிவித்தார் கணேசன். அவர் சொன்ன இடத்தைக் கண்டவருக்குப் பேரதிர்ச்சி. அது ஆற்றில் வண்ணாரர்கள் துணி வெளுக்கும் கல். தயங்கிய நபர் ஆட்கள் உதவியுடன் கல்லை திருப்ப, கண்டோர்கள் அனைவருக்கும் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் கலந்து வந்தது. ஆச்சர்யம் விளைந்த காரணம், இவ்வளவு பெரிய கணேசனின் மூர்த்தத்தை முதன் முதலில் கண்டதால். அதிர்ச்சி பிறந்ததுக்கான காரணம் இதை வெறும் சலவைக் கல்லாக நினைத்து கணேசனின் முதுகில் அல்லவா இவ்வளவு நாளும் நம் துணிகளை அடித்து துவைத்திருக்கிறோம் என்று. பின்னர் ஆற்றிலிருந்து கணேசனை எடுத்து கோனேரி தீர்த்தக்கரையில் பிரதிஷ்டை செய்திருக்கின்றார்கள்.