தருமபுரம் ஆதீனம் குருபூஜை மற்றும் 27வது குருமகாசன்னிதானம் ஞானபீடாரோஹண நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2019 03:12
மயிலாடுதுறை: திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமபுரம் ஆதீனம் 26 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருபூஜை நாளை (டிச.,13ல்) நடைபெறுகிறது.
தருமபுரம் ஆதீனத் திருமடத்தின் 26 ஆவது குருமூர்த்திகளாக 1971 ஆம் ஆண்டு பட்டம் ஏற்று 48 ஆண்டுகள் அருட்செங்கோலோச்சி 04-12-2019 புதன்கிழமை அன்று கார்த்திகை மாதம் சதய நட்சத்திரம் சுக்கிலபட்சம் அஷ்டமி திதி அன்று சுத்தாத்துவித முத்திப்பேறு எய்தினார்கள். தருமபுரம் மேலவீதியில் ஆனந்த பூங்காவில் அமைந்துள்ள ஆனந்த பரவச தேசிக பரமாசாரிய சுவாமிகள் குருமூர்த்த வளாகத்தில் ஸ்ரீலஸ்ரீ குருமூர்த்திகளது திருமேனி நல்லடக்கம் செய்யப்பட்டு 13-12-2019 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி அளவில் குருபூஜை நடைபெற உள்ளது. திருச்சிராப்பள்ளி, திருவையாறு தேவஸ்தானங்களின் கட்டளை விசாரணை மற்றும் சென்னை சமயப் பிரசார நிலைய கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீமத் குமாரசுவாமித் தம்பிரானுக்கு தருமபுரம் ஆதீனம் 26வது குருமூர்த்திகள் ஞானசாரிய அபிஷேகம் செய்து ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் என திருநாமம் சூட்டி சின்ன பண்டார சன்னிதியாக 01.02.2017 புதன்கிழமை அன்று நியமித்தருளினார்கள். 26 ஆவது குருமணிகள் பரிபூரணமான பின் 27 ஆவது குருமகாசன்னிதானமாக ஞானபீடாரோஹண நிகழ்வு பண்டாரக்கட்டில் நாளை வெள்ளிக்கிழமை 12.00 மணிக்குமேல் 1.00 மணிக்குள் நிகழவுள்ளது. 1.30 மணி அளவில் மஹேஸ்வர பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை குருமூர்த்தங்கள் சிறப்பு வழிபாடும், 8.00 மணிக்குமேல் பட்டின ப்பிரவேசமும் கொலுக்காட்சி நடைபெறுகிறது.