பதிவு செய்த நாள்
23
டிச
2019
10:12
சபரிமலை: சபரிமலையில், போலீசார் மற்றும் தேவசம் போர்டு சார்பில் நடந்த கற்பூர தீப ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சபரிமலையில் மண்டல காலம், நிறைவு கட்டத்தை எட்டும் போது, இங்கு பணிபுரியும் போலீசார் மற்றும் தேவசம் போர்டு ஊழியர்கள் சார்பில், கற்பூர தீப பவனி நடத்தப்படும். நேற்று முன்தினம் போலீசார் சார்பிலும், நேற்று தேவசம் போர்டு சார்பிலும், இந்த ஊர்வலம் நடந்தது. கோவில் கொடி மரம் முன் தந்திரியும், மேல்சாந்தியும் கற்பூர தீபத்தை ஏற்றினர். வட்ட வடிவ பாத்திரத்தில், கொளுந்து விட்டு எரியும் கற்பூரத்தை, இரண்டு பக்கமும் அசைத்தபடி சென்றபோது, அந்த தீ ஜூவாலை வானத்தை நோக்கி எழுந்தது. தொடர்ந்து நையாண்டி மேளம், செண்டைமேளம், பஞ்சவாத்யம் முழங்க, ஊர்வலம், அய்யப்பன் கோவிலை சுற்றி, மாளிகைப்புறத்தம்மன் கோவிலை வலம் வந்த பின், 18ம் படி அருகே வந்து நிறைவு பெற்றது.இதில், புலி மீது அய்யப்பன் வருவது போன்ற வாகனம் எடுத்து வரப்பட்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு, கணபதி, பார்வதி என பல்வேறு வேடம் தரித்து ஊழியர்கள் வந்தனர். ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரும்பாலான பள்ளிகளில், அரையாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு, நடை அடைக்கப்பட்ட போது, பக்தர்களின் வரிசை, மரக்கூட்டத்தையும் கடந்து, சபரிபீடம் வரை காணப்பட்டது.
நேற்றும் அதிக கூட்டம் இருந்தது. இதனால் பக்தர்கள், 18ம் படியேறி, தரிசனம் செய்ய எட்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்து, நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், படியேறும் பக்தர்கள், மீண்டும் ஒரு முறை கியூவில் நின்று, வடக்கு வாசல் வழியாக சென்று, சுவாமி கும்பிட வேண்டி உள்ளது.சபரிமலையில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த வெடி வழிபாடு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி, மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.பல துறைகளும் தடையில்லா சான்றிதழ் வழங்க, சுணக்கம் காட்டி வந்த நிலையில், தேவசம் போர்டு முயற்சியால், வெடி வழிபாடு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. சிறிய வெடி - 10, பெரிய வெடி - 20 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.