சபரிமலையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2019 11:12
சபரிமலை: சபரிமலையில் கூட்டம் அதிகமாகி வருவதால் தரிசனத்துக்கான காத்திருப்பு நேரமும் அதிகரித்துள்ளது. சன்னிதானத்தில் வெடி வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு நடை அடைக்கப்பட்ட போது பக்தர்களின் கியூ மரக்கூட்டத்தையும் கடந்து சபரிபீடம் வரை காணப்பட்டது. நேற்றும் அதிக கூட்டம் இருந்தது. இதனால் பக்தர்கள் 18-ம் படியேறி தரிசனம் செய்ய எட்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. நீண்ட நேரம் காத்திருந்து நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் படியேறும் பக்தர்கள் மீண்டும் ஒரு முறை கியூவில் நின்று வடக்கு வாசல் வழியாக சென்று சாமி கும்பிட வேண்டியது உள்ளது.டிச.26ல் சூரிய கிரகணத்தை யொட்டி காலை 7:30க்கு சபரிமலை, மாளிகைப்புறம், பம்பை கோயில்கள் அனைத்தும் அடைக்கப்படும். அன்று மாலையிலும் தீபாராதனைக்கு பின்னர்தான் படியேறி தரிசனம் செய்ய முடியும். டிச., 27ல் மண்டல பூஜைக்காக காலை 9:30 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு விடும். இதை பக்தர்கள் கருத்தில் கொண்டு பயணத்திட்டத்தை வகுக்க வேண்டும் என தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு தெரிவித்தார்.
சபரிமலையில் நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த வெடி வழிபாடு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல துறைகளும் தடையில்லா சான்றிதழ் வழங்க சுணக்கம் காட்டி வந்த நிலையில் தேவசம்போர்டு, முயற்சியால் வெடிவழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சிறிய வெடி 10, பெரிய வெடி 20 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.