ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் பச்சை மரகத நடராஜருக்கு பூசப்பட்டுள்ள சந்தனக்காப்பு நாளை (ஜன.9) களையப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் பச்சை மரகதக்கல் நடராஜர் சன்னதி உள்ளது. மரகதக்கல்லின் பாதுகாப்பு கருதி ஆண்டு முழுதும் சந்தனக்காப்பு பூசப்பட்டிருக்கும்.
மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையப்படும். இந்த ஆண்டு நடை பெறவுள்ள ஆருத்ரா தரிசன விழா குறித்து நிர்வாக செயலர் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது: ஜன.9 காலை 8:00 மணிக்கு மரகத நடராஜர் மேனியில் பூசப்பட்ட சந்தனகாப்பு களையப்படும். 9:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கும். அன்று முழுவதும் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். இரவு 11:00 மணிக்கு மேல் மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். ஜன.10 அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதனை தொடர்ந்து மரகத நடராஜருக்கு புதிய சந்தனம் பூசப்படும். ரூ.10, ரூ.100, ரூ.250 என 3 கட்டண வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரவு 9:00 முதல் ஜன.10 காலை 6:00 மணி வரை நாட்டியாஞ்சலி நடக்கிறது. 10 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.