பதிவு செய்த நாள்
17
ஜன
2020
11:01
திருவண்ணாமலை: மாட்டு பொங்கலையொட்டி, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தி பகவான் மற்றும் சூரிய பகவானுக்கு, அருணாசலேஸ்வரர் காட்சி அளிக்கும் விழா நடந்தது.
இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். உழவனின் நண்பனாக விளங்கும், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டு பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடிமரம் அருகில் உள்ள அதிகார நந்தி மற்றும் கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்திக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பின்னர், பெரிய நந்தி பகவானுக்கு, வண்ண மலர்கள், பல்வேறு வகை பழங்கள், இனிப்பு வகைகள், காய், கனிகள் மற்றும், ரூபாய் நோட்டுக்கள் என, 108 வகையான, மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, காலை, 6:00 மணிக்கு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், நந்திபகவானுக்கு காட்சி அளித்தனர். பின்னர், ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயலில், சூரியபகவானுக்கு சுவாமியும், அம்மனும் காட்சி அளித்தனர். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, கோவில் கோ சாலையில் உள்ள பசுக்களை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து, மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.