பதிவு செய்த நாள்
31
ஜன
2020
12:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. பொள்ளாச்சியில் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிடைத்த கல்வெட்டு அடிப்படையில், கொங்கு பாண்டிய சுந்தர பாண்டிய தேவர் கோவிலுக்கு கல் நிலவு பரிசளித்தார் என்றும் காணப்படுகின்றன.
இந்த மன்னன் கி.பி. 1285 முதல் 1300 வரை ஆட்சி புரிந்தவர். அதனால், சுப்ரமணிய சுவாமி கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.இங்கு, விநாயகர், சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி, பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. கோவிலில், 1929, 1947, 1983, 2001ம் ஆண்டுகளில், கும்பாபிஷேக விழா நடந்தது.பழமை வாய்ந்த கோவிலில் ஐந்தாவது முறையாக கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, ஏப்., மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு, திருப்பணிகள் துவங்கப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 26ம் தேதி துவங்கியது.
நேற்று அதிகாலை பரிவார யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்; விநாயகர் பூஜை, நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், காலை, 9:15 மணிக்கு கன்னிமூல கணபதி, சுந்தரேஸ்வரர், மீனாட்சி மற்றும் சுப்ரமணிய சுவாமி ராஜ கோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பி, கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர். தொடர்ந்து, மூலவருக்கு கும்பாபிஷேகம், அலங்கார வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.பேரூர் ஆதினம் மருதாசல அடிகள், சப் - கலெக்டர் வைத்திநாதன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் பங்கேற்றனர்.