திண்டுக்கல்: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர். பழநியில் தைப்பூச விழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பாதயாத்திரையாக வருகின்றனர்.
வெளி மாவட்ட போலீசார் உட்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், பொதுமக்கள் கூடும் இடங்களில் சீருடை அணியாத போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் –பழநி ரோட்டில் டூவீலரில் போலீசார் இரவில் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இரவு 10:00 மணிக்கு மேல் பக்தர்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நகைகள், உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இரவில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைப்பட்டை, ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுகிறது. நாளை (பிப்.7) முதல் ஞாயிறு வரை கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மலைக்கோயில் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. மலையில் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க போலீசார் தடைவிதித்துள்ளனர்.