பதிவு செய்த நாள்
06
பிப்
2020
03:02
ஆறு மலைகளைக் கடந்தபின் ஏழாவது மலையான வேங்கடமலையில் திருப்பதி ஏழுமலையான் அருள்பாலிக்கிறார். இந்த ஏழுமலைகளின் பெயர்க்காரணத்தை அறிவோமா!
1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு, ‘வேங்கடமலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாஜலபதியாக (சீனிவாசன்) மகா விஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷனே மலையாக வந்தார். ‘சேஷன்’ என்றால் ‘பாம்பு’. எனவே இது ‘சேஷ மலை’ எனப்படுகிறது.
3. வேத மலை: வேதங்கள் மலை வடிவாக நின்று பெருமாளை வழிபட்டன. இதுவே ‘வேதமலை’ ஆகும்.
4. கருட மலை: வைகுண்டத்திலிருந்து ஒரு மலையை எடுத்து வந்த கருடாழ்வார் திருப்பதி மலையில் வைத்தார். இதற்கு, ‘கருடமலை’ என்று பெயர்.
5. விருஷப மலை: விருஷபன் என்னும் அசுரன், இங்கு வழிபட்டு மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இங்கு ‘விருஷப மலை’ உள்ளது.
6. அஞ்சன மலை: அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க, திருப்பதியிலுள்ள ஆதிவராஹரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக அனுமனை குழந்தையாகப் பெற்றாள். இவளது பெயரில் உள்ள மலை ‘அஞ்சன மலை’ .
7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவான் இருவருக்குள் யார் பலசாலி என்பது குறித்து ஏற்பட்ட போட்டியில், மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் எனத் தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும், ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதனடிப்படையில் இங்குள்ள மலைக்கு, ‘ஆனந்த மலை’ எனப் பெயர் வந்தது.
இந்த ஏழுமலைகளையும் ஏறி வருவோருக்கு மனக்கவலை மறையும். ஏழேழு பிறவிக்கும் நன்மை கிடைக்கும்.