சிவன் கோயில்களில் சுவாமி உலா வரும் போது ‘ஆலால சுந்தரா!’ என ஒருவர் சொல்ல, மற்றவர்கள் ‛அற்புத சுந்தரா!’ என கோஷமிடுவர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் திரண்டதால் எங்கும் வெம்மை பரவியது. இதிலிருந்து தப்பிக்க சிவனின் உதவியை நாடினர். சிவன் தன் நண்பரான சுந்தரரை அழைத்து, பாற்கடல் விஷத்தை ஒன்று திரட்டும்படி கட்டளையிட்டார். அவரும் ஐந்தெழுந்து மந்திரத்தை ஜபிக்க, நாவல்பழம் போல விஷம் உருண்டையாகி கைக்கு வந்தது. அதைச் சிவனிடம் ஒப்படைக்க அவர் அதை விழுங்கினார். இதைக் கண்ட தேவர்கள் பரவசத்துடன் ‘ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா’ எனக் கோஷமிட்டனர். ‘விஷத்தை விழுங்கி அற்புதம் நிகழ்த்திய சிவனே’ என்பது இதன் பொருள். இதைச் சொன்னாலும், கேட்டாலும் சிவனருளால் பயம் நீங்கும்.