சீதையைக் கடத்திய ராவணனுக்கு, அவனது தம்பி விபீஷணன் புத்திமதி கூறினான். ஆனால் ராவணன் ஏற்கவில்லை. இதனால் வருந்திய விபீஷணன் கதாயுதத்தை ஏந்தியபடி நான்கு ராட்சதர்களுடன் ராமனைக் காண புறப்பட்டான்.
துாரத்திலேயே பார்த்த வானர அரசன் சுக்ரீவன், “பார்த்தாயா ராமா! ராவணன் நம்மை அழிக்க தம்பியை கதாயுதத்துடன் அனுப்பியுள்ளான். நான்கு ராட்சதர்களும் கூட வருவதைப் பார்” என்றான். இதைக் கேட்டு, “விபீஷணன் ஒரே ஒரு ஆயதத்துடன் தானே வருகிறான்” என்றார் ராமர். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? பயத்தில் இருந்த சுக்ரீவனுக்கு ஒரு ஆயுதம் கூட பல ஆயுதங்களாக கண்களுக்கு தெரிந்ததாம். ராமனாகிய பரம்பொருளே அவனுடன் இருந்தும் பயத்தினால் தன் பலத்தை உணர முடியவில்லை. இதைத் தான் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்கிறார்கள்.