திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலிலுள்ள அம்பிகை மதுரபாஷினி எனப்படுகிறாள். ‘மதுரம்’ என்றால் ‘தேன்’. ‘பாஷினி’ என்றால் ‘இனிமையாகப் பேசுபவள்’. சிவனைப் போல இந்த அம்மனுக்கும் நெற்றிக்கண் உண்டு. நெற்றிக்கண் என்றாலே சிவனின் கோபக்கனல் நம் மனதில் தோன்றும். ஆனால், மதுரபாஷினிக்கு சந்திரனே நெற்றிக்கண்ணாக உள்ளது. குளிர்ச்சி மிக்க இக்கண்ணால் நாடி வரும் பக்தர்களுக்கு மன வலிமை, நல்லறிவு தருகிறாள். பேச்சில் குறைபாடு நீங்கவும், கல்வித்தடை அகலவும் பரிகாரமாக பவுர்ணமியன்று அம்மனுக்கு விளக்கேற்றுகின்றனர்.