பதிவு செய்த நாள்
24
பிப்
2020
11:02
வீரபாண்டி: மூலவர் விநாயகர் மீது சூரிய ஒளி பட்டதால், திரளானோர் தரிசனம் செய்தனர். ஆட்டையாம்பட்டி, கைலாசம்பாளையம்புதூர், ராஜகணபதி கோவிலில், 2016ல், ராகு, கேது, நவக்கிரக பரிவார சிலைகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதிலிருந்து, பிப்., 21 முதல், 25 வரை, காலை, 7:00 முதல், 7:30 மணிக்குள், சூரிய ஒளி, மூலவர் விநாயகர் சிலை மீது விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. நடப்பாண்டு, இரு நாள் தாமதமாக, பிப்., 23 காலை, 7:15 முதல், 7:30 வரை, மூலவர் மீது சூரியஒளி விழுந்தது. அப்போது, திரளானோர் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு, இன்னும் ஓரிரு நாள் நிகழும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.
உட்பிரகாரத்தில்...: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், பிப்., 21 முதல், 23 வரை, மாலையில், சூரிய ஒளி, லிங்கம் மீது விழும். ஆனால், இரு நாளாக மேகமூட்டதால், சூரிய ஒளி தென்படவில்லை. மூன்றாம் நாளான நேற்று, திரளான பக்தர்கள், மூலஸ்தனம் முன் குவிந்தனர். மாலை, 5:55 மணிக்கு, சூரிய ஒளி, ராஜகோபுரம் வழியாக, கோவில் உட்பகுதியிலுள்ள உண்டியல் வரை தென்பட்டது. இதனால், பக்தர்கள், ஓம் நமச்சிவாயா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். ஆனால், சில நிமிடத்தில், ஒளி மறைந்தது. மூன்றாம் நாளாக நேற்றும், கருவறைக்குள் செல்லவில்லை. பின், தீபாராதனை நடந்தது.