திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2020 07:03
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மார்ச் 9 காலை, இரவு தெப்ப விழா நடைபெறுகிறது.இக்கோயிலில் 11 நாட்கள் மாசி தெப்பவிழா நடைபெறும். கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பூர்வாங்க பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு ஆஸ்தானத்திலிருந்து உற்ஸவ பெருமாள் தேவியருடன் சர்வ அலங்காரத்தில் கல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிப்படம் திருவீதி வலம் வந்தது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைக்கு பின் தீபாராதனை நடந்தது. காலை 11:20 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. மாலையில் பெருமாளுக்கும், தாயாருக்கும் காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கியது. இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் தேவியருடன் திருவீதி வலம் வந்தார்.தொடர்ந்து தினசரி காலை திருவீதி புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும்.மார்ச் 5 இரவு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், மார்ச் 6 மாலை பெருமாளுக்கு சூர்ணாபிேஷகம், தங்கப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும். மார்ச் 8ல் சிவகங்கை ரோட்டில் டி.வைரவன்பட்டியில் உள்ள ஜோசியர் தெப்பத்திற்கு சுவாமி எழுந்தருள்வார். அங்கு வெண்ணெய்த்தாழி சேவையும், காலை 10:00 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடக்கிறது. மார்ச் 9 காலை 10:15, இரவு 10:00 மணிக்கு தெப்பம் நடக்கிறது. மறுநாள் காலையில் தீர்த்தவாரி, மாலையில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.