பதிவு செய்த நாள்
02
மார்
2020
10:03
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், மண்டலாபிஷேகம் நேற்றுடன் நிறைவு பெற்றது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ல், கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, பிப்., 6ல், மண்டலாபிஷேக மண்டகப்படி நிகழ்ச்சிகள் துவங்கின.
நேற்று முன்தினம் மாலை, மண்டலாபிஷேக பூர்த்திக்கான முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. நடராஜர் சன்னிதி முன், யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பெருவுடையார், பெரியநாயகி அம்மன்களுக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு, சிவாச்சாரியார்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.காலை, 8:30 - 9:00 மணிக்குள், மூல மூர்த்திகளுக்கு, பால் அபிஷேகம் செய்யப்பட்டு, கடத்தில் கொண்டு வந்த புனித நீர் ஊற்றப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.நாட்கள் குறைப்புமொத்தம், 48 நாட்கள் நடக்க வேண்டிய, மண்டலாபிஷேகம், சித்திரை பிரம்மோற்சவ விழாவிற்காக, 24 நாட்களாக குறைக்கப்பட்டது. மண்டலாபிஷேகம் பூர்த்தியான நிலையில், மீதமுள்ள, 24 நாட்களும் மூல மூர்த்திகளுக்கு பால், எண்ணெய் அபிஷேகம் மட்டும் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்படும், என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். மண்டலாபிஷேக நாட்களில், சுவாமி தரிசனம் செய்வதற்காக, பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று, மண்டலாபிஷேகம் நிறைவு என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.