பதிவு செய்த நாள்
03
மார்
2020
11:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றம், நேற்று நடந்தது. கோவை மாவட்டம், காரமடையில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான, அரங்கநாதர் கோவில் உள்ளது. கோவிலில், மாசிமக தேர் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடக்கும்.
நடப்பாண்டு, நேற்று முன்தினம் இரவு, கிராம சாந்தி, நேற்று காலை, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.கோவில் வளாகத்தில், கருடாழ்வாருக்கு, கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேத வியாச பட்டர், கோவில் அர்ச்சகர்கள், வேத மந்திரங்கள் முழங்கி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்தனர். கருடாழ்வார் உருவம் பொதித்த கொடி ஏற்றப்பட்டது. 100க்கணக்கான தாசர்கள், சேகண்டி அடித்து, சங்கொலி எழுப்பினர். பின், அன்ன வாகனத்தில், அரங்கநாதபெருமாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வரும், 6ம் தேதி வரை இரவு, சிம்ம, அனுமந்த, கருடன் வாகனங்களில் திருவீதி உலா, பெட்டத்தம்மன் அழைப்பு நடக்கவுள்ளது.
7ம் தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவம், 8ம் தேதி மாலை 4:00 மணிக்கு, தேரோட்டம், 9ம் தேதி இரவு, குதிரை வாகனத்தில் பரிவேட்டை, 10ம் தேதி இரவு, சஷே வாகனத்தில் தெப்பத் திருவிழா, 11ம் தேதி மாலை சந்தான சேவை சாற்றுமுறை நடக்கவுள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.சிறப்பு பஸ்கள் இயக்கம்காரமடை தேர் திருவிழா, வரும், 8ம் தேதி நடக்கவுள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழக, கோவை மண்டலத்தில் இருந்து, 100 பஸ்கள், திருப்பூர் மற்றும் ஊட்டியில் இருந்து தலா, 35, ஈரோட்டில் இருந்து, 30 என, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும், 8, 9ம் தேதிகளில் பஸ்கள் இயக்கப்படவுள்ள நிலையில், கூட்ட நெரிசலை பொறுத்து, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.