குண்டம் விழாவில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி: பூசாரி மட்டுமே தீ மிதிக்க தாளவாடியில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2020 10:03
பு.புளியம்பட்டி: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற குண்டம் விழாவில், பூசாமி மட்டுமே தீ மிதித்தார். இதில் இரு மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தாளவாடியை அடுத்த, தமிழக-கர்நாடக எல்லையில், கொங்கள்ளி வனப்பகுதி மலையில், பிரசித்தி பெற்ற கொங்கள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெண்களுக்கு அனுமதியில்லை; ஆண்கள் மட்டுமே வழிபடுகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா நடக்கிறது. நடப்பாண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, கோவில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து, திருக்குண்டம் திறக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, கோவில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார். பக்தர்கள் அனைவரும் குண்டத்தை வணங்கி, சாம்பலை அள்ளி விபூதியாக பூசிக் கொண்டனர். கர்நாடக மாநில எல்லையில் உள்ளதால், அம்மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர்.