கொரோனா முன்னெச்சரிக்கை: திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2020 03:03
காரைக்கால்: காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்துள்ளனர்.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருகிறது. இதனால் உலகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சனிக்கிழமை என்பதால் அதிக அளவில் பக்தர்கள் திருநள்ளாறு முகாமிட்டனர். மேலும் அதிகாலை நளன் குளத்தில் நீராடிவிட்டு பின் பகவானை தரிசனம் என்பது பக்தர்கள் வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் புதுச்சேரி அரசு உத்தரவின் பேரில் நேற்று பக்தர்கள் நலன் கருதி நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்துள்ளது.இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் இரண்டு மெகா ரட்சக குழாய் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் திருநள்ளாறு நளன் குளத்தில் குளிப்பதற்கு வந்தனர்.ஆனால் குளத்தில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் முற்றிலும் ஏமாற்ற மடைந்தனர். இதனால் பக்தர்கள் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு பின் பகவானை தரிசனம் மேற்கொண்டனர்.மேலும் பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிக்காமல் இருக்க பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.