பதிவு செய்த நாள்
15
மார்
2020
05:03
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி விழும் காட்சியை, பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான, கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அதிசயம்சுந்தரமூர்த்தி நாயனா ரால், தேவாரம் பாடப்பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி கடைசி அல்லது பங்குனி முதல் வாரத்தில், மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நடக்கும். நேற்று, சூரியன் உதயமானதும், படிப்படியாக ஒளிக்கற்றை கோவிலுக்குள் பரவி, காலை, 6:43 முதல், 6:52 மணி வரை கருவறை தாண்டி, லிங்கத் திருமேனி மீது பரவி, வலமிருந்து இடப்புறமாக மறைந்தது. இதை பார்த்த பக்தர்கள், அவிநாசியப்பருக்கு அரோகரா என, கோஷமிட்டு வழிபட்டனர்.
கோவில் சிவாச்சாரியார்கள் கூறியதாவது: உத்ராயண புண்ணிய காலத்தில், சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறார். சித்திரை, 1ம் தேதியில் இருந்து, ராசி மண்டலத்தில், தன் புதிய பயணத்தை துவக்குகிறார். மாசி மற்றும் பங்குனி மாதத்தில், அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கி, புதிய பயணத்தை சூரிய பகவான் துவங்குவதாக ஐதீகம். சிறப்பு வழிபாடுஅதன்படி, காலை, 6:43 மணிக்கு, சூரிய கதிர்கள் லிங்கத் திருமேனி மீது விழுந்தது. இன்னும், மூன்று நாட்களுக்கு இந்த அதிசயத்தை பார்க்க முடியும். இக்காட்சியை நேரில் பார்த்தால், நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.தொடர்ந்து, அவிநாசியப்பருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிவாச்சாரியார்கள், தேவாரம் பாடி, சிறப்பு பூஜைகள் செய்தனர்.