சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகத்திற்கு இந்து அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது. வடபழநி கோயிலில் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் 107 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்து அறநிலையத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோயில்களில் இதனை பின்பற்றுங்கள்:
* கோயில்களின் முக்கிய இடங்களில் கொரோனா வைரசை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகள் அடங்கிய பதாகைகள், சுவரொட்டிகள் வைக்கப்பட வேண்டும். * காய்ச்சல் மற்றும் இருமலுடன் வரும் பக்தர்களை கண்டறிந்து அவர்களிடம் அன்பாக எடுத்துரைத்து திருப்பி அனுப்ப வேண்டும். இதற்கென கோயில் நிர்வாகம் சார்பில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். * மக்கள் தொடக்கூடிய எல்லா இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். * ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கை கழுவுவதற்கு சோப் வழங்கப்பட வேண்டும். * பக்தர்களுக்கு நெற்றியில் விபூதி மற்றும் குங்குமத்தை நெற்றியில் பூசுவதை அர்ச்சகர்கள் தவிர்க்கலாம். * மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள் கோயிலுக்கு வராமல் தவிர்ப்பது நல்லது. * வழிப்பாட்டு பாடல்களுடன் சேர்த்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் பதிவு செய்து ஒலிபரப்பலாம். * அடுத்த சில வாரங்களில் கோயில் திருவிழா இருந்தால், அதிகளவில் மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்தப்படலாம். இவ்வாறு இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட பழநி கோயிலில் பரிசோதனை: இந்நிலையில் சென்னை வடபழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இருக்கிறதா என மருத்து குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இங்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. வட பழநி முருகன் கோயிலில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் முழுவதும் மக்கள் கைகள் படும் இடங்கள், மற்றும் சன்னதி செல்லும் வழிகளில் உள்ள இரும்பு பிடிகளில் டெட்டால் கலந்த நீரால் சுத்தம் செய்யப்படுகிறது. இங்குள்ள அலுவலகம் மற்றும் முக்கிய அறைகளின் கதவுகள், கைப்பிடிககள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்கென ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். விபூதி தட்டுக்கள் சுத்தமாக கழுவி வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெட்டால் கொண்டு கழுவவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பழைய விபூதிகள் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.