அந்த மாந்திரீகனை பெரிதாக யாரும் பார்த்தது போலத் தெரியவில்லை. அவன் தன் புருவத்தின் மீது மாயாஞ்சனம் என்னும் மை பூசியிருந்தான். அப்படி பூசியவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்வர். ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது. அதனால் அவன் துணிச்சலுடன் தேசிகனைச் சுற்றி நிற்போருடன் சேர்ந்து கொண்டான். அவன் சுமந்து வந்திருந்த சங்கபாலன் என்னும் பாம்பும் பத்திரமாக ஒரு புதருக்குள் மறைந்து நின்றது. அந்நியப் படையெடுப்பை பிரதானப்படுத்தி அங்கிருப்போர் பேசியதை மாற்ற எண்ணிய தேசிகன், ‘‘எம்பெருமானுடைய அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரம் குறித்து கேளுங்கள். இத்தலத்தின் மகிமை பற்றி கேளுங்கள். இப்போது நமக்கு தேவைப்படுவது அவன் மீதான பக்தி ஒன்றே. நம் மனதிற்குள் அவனை நிரப்பினால் பயம் எல்லாம் பறந்தோடும்’’ என்றார். அப்படியானால் திருக்கண்ணில் எழுந்தருளி எங்களுக்கு உபதேசிக்கலாமே’’ என்றார் அடியவர் ஒருவர். ‘‘அதற்கென்ன... செய்தால் போயிற்று’’ என அருகிலுள்ள உற்ஸவ மூர்த்தி எழுந்தருளும் திருக்கண் மண்டபத்திற்கு சென்று அமர்ந்தார். அதற்குள் இருட்டி விட்டதால் தீப்பந்தம் கொளுத்தப்பட்டு அவருக்கு அருகில் நான்கு பேர் நின்றனர். அன்றைக்கு கோயிலுக்கு வந்தவர்களுக்கெல்லாம் கொடுப்பினை. ஒருபுறம் எம்பெருமான் தரிசனம், மறுபுறத்தில் ஆச்சார்ய வைபவம்! தேசிகனின் உபன்யாசம் தொடங்கியது. நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றை சொல்லி பேச்சை தொடங்கினார். ‘‘உயர்வு அற உயர்நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதிநலம் அருளினன் எவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே!’’ தொடர்ந்து வராக மூர்த்தியின் வரலாறு தொடங்கியது. ‘‘எம்பெருமானுடைய மகத்தான வல்லமையை காட்டுவது இந்த வராக அவதாரம். இரண்யாட்சன் இந்த பூமியை ஒரு பந்து போல துாக்கிச் சென்று பாற்கடலுக்குள் மறைத்தான். அப்படியென்றால் அவனது வலிமையை கற்பனை செய்து பாருங்கள். அவனுக்கு அந்த வலிமையை கொடுத்தவர் யார் என்றால் அதுவும் எம்பெருமானே! அசுர சக்தி இப்படி அதர்மமாக நடந்தால் எம்பெருமானும் தன் சக்தியை காட்டி அவன் கொட்டத்தை அடக்குவான். எம்பெருமானும் வராகமாகி தன் கொம்புகளால் பூமியை துாக்கியதோடு, வான்வெளியில் மிதக்கச் செய்தான். பஞ்சபூத சேர்க்கையை உருவாக்கி பூமியைச் சுழலச் செய்து உயிர்களையும் படைத்தான்! இதை எல்லாம் செய்ய எவ்வளவு ஆற்றல் வேண்டும்? இந்த பூமியை கடலில் ஒளித்து வைக்கும் ஆற்றல் கொண்ட ஒருவனும் இருந்தால் அல்லவா, எம்பெருமானும் தன் சக்தியை காட்ட முடியும்? அப்படி ஒருவனை படைத்ததும் அவனே... அவன் செயலை முறியடித்து விஸ்வரூபம் எடுத்ததும் அவனே! அப்படிப்பட்ட லோக நிர்மாணியின் திவ்ய ஸ்தலம் தான் ஸ்ரீமுஷ்ணம். இந்த பெருமாளின் மகிமையை உணர்ந்து சேவிக்க வேண்டும். இவனோடு சேர்ந்தே இருப்பவள் மகாலட்சுமிதாயார்! ஒரு பக்கம் லட்சுமின்னா மறுபக்கம் பூமாதேவி! இந்த பூமாதேவியின் மகன் தான் பவுமன் என்னும் நரகாசுரன். அதாவது எம்பெருமானின் மகன்! நரகாசுரன் விஷ்ணுபுத்திரன் என்பது ஆச்சரியமான விஷயம்! கருணை வடிவானவன் எம்பெருமான். ஆனால் அவன் மகனிடம் அது சிறிதும் இல்லை! நான் என்ற ஆணவமும், தன்னை வெல்ல எவருமில்லை என்ற திமிரும் அதிகம் இருந்தது. இதுவும் ஆச்சரியம் தானே? ஆனால் தன் மகனுக்காக எம்பெருமான் சலுகை காட்டவில்லை. கிருஷ்ணராக வந்து அவனை சம்ஹாரம் செய்தான். இந்த சந்தர்ப்பத்தில் பூமாதேவி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். கடைசி வரை தவறாகவே வாழ்ந்து விட்ட தன் மகனின் இறப்பு, உலகிற்கு ஒரு சந்தோஷமான விஷயம். இதை உலகத்தவர் கொண்டாட வேண்டும். அப்போது அவனை நினைப்பதோடு, தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதும் மக்களின் மனதில் பதியும். இத்துடன் கடவுள் பாரபட்சம் அற்றவர் என்பதும் புரியும் என்றாள். இதையே தீபாவளியாக கொண்டாடுகிறோம். அந்த நாளில் தண்ணீர் எல்லாம் புனித கங்கையாக மாறுகிறது. கங்கையில் நீராடினால் பாவம் மறையும். திருந்திய நரகாசுரன் பிராயசித்தமாக இப்படி கேட்க, கங்கையும் அதை ஏற்றாள். நம்மை எல்லாம் புண்ணியர்களாக ஆக்கிட பூமாதேவி செய்த ஏற்பாடு இது. பூமாதேவியே இத்தலத்தில் அம்புஜவல்லித் தாயாராக இருக்கிறாள்!’ இங்கு வருவோருக்கு ஆணவம், பாவம், எமபயம் நீங்கும். தேசிகன் இப்படி பூவராக சுவாமியின் பெருமையைக் கூறியபடி சகலரையும் பார்த்தார். அவர்களில் மாந்திரீகனும் இருந்தான்! அவன் யார் கண்களுக்கும் தெரியவில்லை. ஆனால் தேசிகனின் கண்களுக்கு மட்டும் பளிச்செனத் தெரிந்தான். அவனைப் பார்த்து தேசிகன் சிரிக்கவும் வெலவெலத்து போனான். தேசிகனும் பேசி முடித்ததும் சன்னதி பட்டரிடம் எல்லோருக்கும் தீர்த்தம் கொடுக்கச் செய்தார். மாந்திரீகன் தீர்த்தம் பெறாமல் அங்கிருந்து நகர்ந்தான். சிறிது துாரத்தில் திரும்பிப் பார்த்த போது தேசிகன் அழைப்பது போலிருந்தது. தன் உருவம் மற்றவருக்கு தெரியாத நிலையில் தேசிகனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? தன் அஞ்சனக்கட்டு பலிக்கவில்லையே என யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். இரவு முழுவதும் மகாசண்டியை தியானித்து, ஊரை விட்டு தேசிகன் செல்லும் நேரத்தில் சங்கபாலன் பாம்பை ஏவி தன் திட்டத்தை நிறைவேற்றலாம் என நம்பினான். இதற்கிடையில் அரங்கப்பெருமான் அருள்புரியும் ஸ்ரீரங்கத்தில் அதே இரவு நேரம்! பிள்ளைலோகாசார்யார் வடக்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் வந்தவர் முதலில் அரங்கநாதரை தரிசிக்காமல் தாயாரின் சன்னதி நோக்கி நடந்தார். சீடர்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஒரு வைணவன் கோயிலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சில உள்ளன. ராமானுஜர் அவற்றை உபதேசித்ததோடு தானும் பின்பற்றி வழிகாட்டியுள்ளார். அதன்படி கால்களை கழுவிக் கொண்டும், தலையின் மீது தீர்த்தத்தை புரோட்சித்துக் கொண்டும் (தெளித்துக் கொண்டு) தான் கோபுர வாசலை கடக்க வேண்டும். அப்படி வரும் போது மனதிற்குள் நாராயண நாமத்தை ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்தோத்திரங்கள் சொல்லலாம். கொடிமரம் முன் வடக்கு திசை பார்த்து விழுந்து வணங்க வேண்டும். அப்போது நெற்றி தரையில் பட்டு, துாசி இருக்குமாயின் அது ஒட்ட வேண்டும். இது உடம்பின் மற்ற பாகங்களுக்கும் பொருந்தும். கோயில் துாசிக்கும், பசுவின் குளம்படி துாசிக்கும் ‘பவித்ர துாசி’ என்று பெயர். அடியவர்கள் காலடியும், பசுவின் காலடியும் மிக உயர்ந்தவை. அது நம் மீது பட்டால் ஆணவத்தை போக்குவதோடு, பக்தியில் உருக்கமும் சேர்க்கும். இதன் பிறகு பிரதான பெருமாளை தரிசித்து பிறகு தாயார், உபசன்னதிகளை தரிசிக்க வேண்டும். இறுதியாக ஓரிடத்தில் அமர்ந்து தியானிக்க வேண்டும். அதன்பின் நேராக வீட்டிற்கு வந்து பிரசாதத்தை எல்லோருக்கும் தந்து உண்ணச் செய்ய வேண்டும். இதுவே கோயில் வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை. இந்த ஒழுங்கினை உருவாக்கிய ராமானுஜர் தானும் பின்பற்றி வாழ்ந்தார். அவர் வழியில் நடக்கும் பிள்ளைலோகாசார்யார் அதை விடுத்து, தாயார் சன்னதி நோக்கி நடக்கவே சீடர்களின் மனதில் குழப்பம் எழுந்தது. ‘‘சுவாமி! என்ன வினோதம்! எப்போதும் அரங்கநாதப் பெருமானை தரிசித்த பிறகல்லவா... தாயாரை சேவிக்கச் செல்வீர்கள். இன்றென்ன தலைகீழாக?’’ என மணப்பாக்கத்து நம்பி கேட்டார். ‘‘யாராவது இப்படி கேட்பீர்கள் என்று தெரியும். என்னவோ தெரியவில்லை. உள்ளுணர்வில் தவறு நடக்கப் போவது போல் ஒரு உணர்வு’’ ‘‘ஒரு தவறா... அதுதான் பல தவறுகள் நடந்து விட்டதே சுவாமி?’’ ‘‘அந்நியர்களையும், ஆட்சியாளர்களையும் மனதில் வைத்து சொல்கிறீர்கள். இந்த பூமி அந்த வகை தவறுகளை பல இடங்களில் பலமுறை கண்டுள்ளது! இன்று இந்த பூமியில் நமக்கு தான் சிக்கல். புராண காலத்தில் பூமிதேவிக்கே சிக்கல் வந்தது. அவளைத் துாக்கிச் சென்று கடலுக்குள் ஒளித்து வைத்து விட்டான் இரண்யாட்சன் என்ற அசுரன்! எம்பெருமான் வராக அவதாரம் எடுத்து வந்து பூமியைத் திரும்ப வானில் நிலைபெறச் செய்தான். நான் நம் ேக்ஷத்திரத்திற்கு மாசு ஏற்பட்டு வருவதற்காக மட்டும் வருந்தவில்லை. இது அதையும் கடந்த ஒன்று. என் மிக விருப்பமான யாருக்கோ பெரிதாக தீங்கு நேரப் போவது போல் ஒரு உள்ளுணர்வு. அதனால் தான் அதை தாயாரின் காதில் சொல்ல முதலில் வந்தேன்’’ ‘‘ஆச்சரியம்... எம்பெருமானிடம் முதலில் சொல்லாமல் தாயாரிடம் முதலில் சொல்வதா?’’ என்றார் ஒருவர்.