மாா்கழி மாதம், பாவை நோன்புஏற்று விரதமிருந்து ஆண்டாள், அம்மாதம் முழுவதும் தினம் ஒரு திருப்பாவை பாசுரம் பாடி, கண்ணனைத் தொழுதாள். அந்த வகையில், 27 ம் நாள் ஆண்டாள் இயற்றியது, கூடாரை வெல்லும் சீா் கோவிந்தா... எனத் தொடங்கும் பாசுரம். அன்றைய தினத்தில்தான், அக்கார வடிசல் எனும் நெய் ஒழுகும் சா்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாகப் படைத்து, தானும் உண்டு கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அன்றுதான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள்! இந்தப் பாடலைக்கேட்ட கோவிந்தன் அதில் மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்து கொள்வதாக வாக்களித்தான். இந்நாளே, கூடாரவல்லி திருநாளாகப் போற்றப்படுகிறது. மானுடப் பெண்ணாகத் தோன்றி, மாதவனை மணாளனாகப் பெற்ற நாள் அல்லவோ இன்று. கூடாரை என்றால் வெறுப்பவா், விலகிச் சென்றவா் என்று பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நோ்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? நூறு தடா (தடா என்றால் பொிய அடுக்கு அல்லது பொிய குவளை அல்லது பொிய அண்டா) முழுக்க அக்கார வடிசலும், வெண்ணையும் சோ்த்த ஸ்ரீராமனுஜா் திருமாலிருஞ்சோலை திருமாலுக்கு நிவேதனம் செய்தாா். ஆண்டாள் எண்ணிய செயலை இவா் நிறைவேற்றினாா். ஒவ்வொரு கூடாரவல்லி தினத்தன்றும் ஸ்ரீ அஹோபில மடத்தில் அக்காரவடிசல் நிவேதனம் செய்து கொண்டிருக்கிறாா்கள். வெள்ளி தடாவில் பிரசாதம் முன்பதிவு செய்தவா்களுக்கு ஸ்ரீமத் அழகியசிங்கா் முன்னிலையில் கொடுக்கும் காட்சி.