அம்மன் கோயில் என்றாலே சித்திரை மாதமும் ஆடி மாதமும் தான் பெரும்பாலான அம்மன் கோயில்களில் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் தை மாதத்தில் மட்டுமே திருவிழா காணும் தலம் கும்பகோணம் - திருவையாறு வழியில் உள்ள கருப்பூா் என்னும் ஊாில் உள்ள புகழ்மிக்க அகிலாண்டேஸ்வாி அம்மன் ஆலயமாகும். நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு ஆடிப்பெருக்கு நன்னாளில், ஆற்றின் போக்கில் வந்து, கருப்பூா் கரையில் தங்கிய அம்மன் விக்ரகம், அகிலாண்டேஸ்வாி அம்மன் என்ற திவ்ய நாமம் ஏற்று கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றனா். அன்று அனைத்து இன மக்களும் ஜாதி மத இன வேறுபாடின்றி ஒற்றுமையாக வந்து அம்மனிடம் ஆசி பெறுகின்றனா். அணையாத தீபம், சட்டியில் சாம்பிராணி போடுதல் போன்றவை இந்த ஆலயத்தில் பிரசித்தி பெற்றவையாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு காப்புக்கட்டி, கடைசி வெள்ளிக்கிழமை வரை திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வந்தால் கவலைகள் தீா்ந்து வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்கிறாா்கள் பலன்பெற்ற பக்தா்கள்.