பதிவு செய்த நாள்
20
மார்
2020
10:03
திருத்தணி: கொரோனா வைரஸ் எதிரொலியால், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றன.
பிற வாகனங்களுக்கு தடை விதித்தும், தினசரி நடக்கும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனா - வைரஸ் எதிரொலியால், திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு செல்லும், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி நேற்று மறுக்கப்பட்டது.மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து பஸ், லாரி, கார், வேன் மற்றும் ஆட்டோக்கள் மூலம் வரும் பக்தர்கள், மலைப்பாதை நுழைவு வாயிலில் நிறுத்தப்படுகின்றனர்.அங்கிருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு நடந்து செல்கின்றனர். ஆனால், இருசக்கர வாகனங்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதால், நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, ஒரு சிலர், லிப்ட் கேட்டு ஏறிச் செல்கின்றனர். சில வயதான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால், மலைக்கோவிலில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.ஆர்ஜித சேவைகள் ரத்துகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முருகன் கோவிலில், தினசரி நடக்கும் ஆர்ஜித சேவைகள், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின் படி, நேற்று முதல் நிறுத்தப்பட்டது.அதே போல், சிறப்பு தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம் போன்ற சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மறு உத்தரவு வரும் வரை, அனைத்து ஆர்ஜித சேவைகளும் நிறுத்தி வைக்கப்படும் என, கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.